--- --:--:-- --

விவசாயிகளுக்கு வழங்கப்படும் 30 ஆயிரம் கோடி கடன்!

11

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் இரண்டாவது நாளாக செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார். கூட்டுறவு வங்கிகள், விவசாய கடன் வழங்க நபார்டு மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

ரவி அறுவடைக்குப் பிறகும் தற்போது காரிப் பருவத்திற்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்க இந்த 30 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்று கூறிய அவர் ஏற்கனவே நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சுமார் 4.2 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடந்த மூன்று மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவகாசம் மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கிசான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் சுமார் 2.5 கோடி பேருக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றார். கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின்படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளதாகவும்
மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் 86 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

மார்ச் மாதம் முதல் வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காக மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு 6,700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊரக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் நான்காயிரத்து 200 கோடி ரூபாய் நிதி உதவி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாநில பேரிடர் நிவாரண நிதியாக 11,002 கோடி ரூபாயை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon