தனிமைப்படுத்தப்பட்ட கொரொனா நோயாளி…ஆத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்!
கோயம்பேட்டிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால் அங்கு கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து ரகசியமாக ஊருக்குள் புகுந்து பதுங்கி இருப்பவர்களின் தகவலை கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கோயம்பேட்டில் இருந்து வந்து திட்டக்குடி அடுத்த அகரம் கிராமத்தில் தங்கி இருந்த 29 பேரின் பெயர்களை கிராம நிர்வாக அலுவலர் பஷீர் என்பவர் சுகாதாரத்துறையினருக்கு அளித்தார். அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தனிமைப்படுத்தினார். அவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது.
மீதமுள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி விட்டு 13 பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த 13 பெயரில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், லிஸ்டில் தனது பெயரை போட்டுக் கொடுத்ததால் தான் கொரொனா நோயாளி என தனிமைப்படுத்தப்பட்டதாக ஆத்திரமடைந்த மணிமாறன் கிராம நிர்வாக அதிகாரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனது தெருவில் மருந்து தெளித்து வேலி போட்டு அடைத்து தடை ஏற்படுத்தியதற்காக கொரொனா சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக விஏஓ கதையை முடிப்பேன் என்றும் மணிமாறன் ஆவேசம் காட்டினார்.

இது குறித்து காவல் நிலையத்தில் ஒரு மனநோயாளி மணிமாறன் மீது கிராம நிர்வாக அதிகாரி பகீர் புகார் அளித்தார். கொரொனா தொற்று ஏற்பட்டால் அது தன்னிடம் இருந்து குடும்பத்தாருக்கும் அவர்கள் மூலமாக சமூகத்திற்கும் பரவி விடக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மத்தியில் தன்னுடைய நோயை மறைக்க முயன்ற தோடு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து நோய் பரவலை தக்க சமயத்தில் தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டுவது தேவையற்றது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், மணிமாறன் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியதும் அவர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
சுகாதாரத் துறையினரும், வருவாய்த் துறையினரும் மக்களுக்காக பணி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது நமது கடமையாகும்.






