அரசு அலுவலகத்தில் புகுந்து லாரியை கடத்திய கும்பல்!
மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் மீட்டுள்ளது. இந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்தது எங்கே ? தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணை வயில் கொட்டகுடி ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் அந்த ஆற்றில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்டு இருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து நாகராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியையும் அவர் பறிமுதல் செய்தார். லாரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இரவு வட்டாட்சியர் அலுவலக வளாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் லாரியை கள்ளச்சாவி போட்டு திருடி சென்றது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளையும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கண்காணித்தபோது சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சிவகங்கை புறப்பட்ட தனிப்படை போலீசார் கல்லல் கிராமத்தில் பதுங்கியிருந்த கும்பலை லாரியுடன் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த முத்து சரவணன், சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்த பூக்கடை பூமிநாதன் மற்றும் பள்ளிகொண்டான் சேது குளத்தை சேர்ந்த விஜய் மற்றும் அஜீத் என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.






