உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்குக…!
கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரொனா விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காணொளியில் நடத்திய ஆலோசனைக்குப் பின் பேசிய ஸ்டாலின் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். மேலும் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கொரொனா பணிகள் குறித்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றியும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஏப்ரல் மூன்றாம் தேதி வரை கொரொனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் தகவல்களையும் அவர் கேட்டிருந்தார்.
ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக அறிவிக்கப் பட்டு இருப்பது கொரொனா அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தொடர்வது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.







