“ஷேவிங் லோஷன்.. வார்னிஷ்.. சானிடைசர்.. மெத்தனால்.. இதெல்லாம் குடிச்சா உயிர்தான் போகும்!!” கடலூரில் மெத்தனால் குடித்த 3 பேர் அம்போ!!
கடலூர் அருகே போதைக்காக மெத்தனாலை குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 20 நாட்களில் மாற்று போதையாக ஷேவிங் லோஷன், வார்னிஷ், சானிடைசர், மெத்தனால் போன்றவற்றை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 10 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர கள்ளச்சாராயம் குடித்தும், சரக்கு கிடைக்காத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டோரின் கணக்கும் எகிறி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும், வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தினசரி சரக்கு அடித்து மப்பேற்றி வந்த குடிமகன்களின் பாடுதான் படு திண்டாட்டமாகியுள்ளது எனலாம்.
டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட சில நாட்கள், கள்ளத்தனமாக சரக்கு பாட்டில்கள் கூடுதல் விலைக்கு கிடைக்க, அலைந்து திரிந்து குடிமகன்கள் வாங்கிக் குடித்தனர். ரூ.110 மதிப்புள்ள குவார்ட்டர் பாட்டில் ரூ.500 வரைக்கும் கள்ளத்தனமாக விற்கப்பட்டது. இந்த கள்ளத்தன வியாபாரம் பார்த்தது டாஸ்மாக் ஊழியர்கள் தான் என்பது தெரிய வந்தது. போலீசார் தமிழகம் முழுவதும் நடத்திய வேட்டையில், இப்படி கள்ளத்தனம் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் இருப்பு இருந்த சரக்கு பாட்டில்கள் அனைத்தும் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
இந்த ஊரடங்கால் டாஸ்மாக் சரக்கு கிடைக்காமல் திண்டாடிப் போன குடிமகன்கள் எதைக் குடித்தால் போதை ஏறும் என மாற்றுப் போதையாக கண்டதையும் குடித்து உயிரை எமனுக்கு வம்படியாக காவு கொடுக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஷேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்து 3 மீனவர்கள் பலியானார்கள். அடுத்து செங்கல்பட்டில் ரயில்வே ஊழியர்கள் 3 பேர் வார்னிஷ் குடித்து, போதை ஏறாமல் ஒரேயடியாக எமலோகம் சென்றனர்.கோவையிலோ, கொரோனா தடுப்புக்காக பயன்படுத்தும் சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்த ஒருவர் உயிரிந்தார்.

இப்போது, கடலூர் அருகே தொழிற்சாலையில் பூச்சி மருந்து தயாரிக்க பயன்படும் மெத்தனாலை குடித்து நேற்று 3 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் ஆலப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து, அங்கு பணிபுரியும் குமரேசன் என்ற ஊழியர் மெத்தனால் திரவத்தை நைசாக லவட்டி வந்துள்ளார். இந்த மெத்தனாலை தண்ணீரில் கலந்து குடித்தால் போதையேறும் என யாரோ கூறியதைக் கேட்ட குமரேசனும் அவரது நண்பர்களான சந்திர காசி, எழில்வாணன், மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோரும் சேர்ந்து குடித்துள்ளனர்.
ஆனால், மெத்தனாலை குடித்தவுடன் போதை ஏறவில்லை. அனைவருக்கும் வயிறு கபகப என எரிய ஆரம்பித்ததும் பதறியுள்ளனர். உடனே அவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சந்திர காசி நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று மாயக் கிருஷ்ணன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். எழில்வாணன் என்பவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை திருடி வந்த குமரேசன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இதற்கிடையே, தொழிற்சாலையில் மெத்தனாலை பாதுகாப்பாக வைக்காமல் மெத்தனமாக இருந்ததாகக் கூறி, சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், போதைக்காக சேவிங் லோஷன், வார்னிஷ், சானிடைசர், மெத்தனால் என கண்ட ரசாயனங்களை குடித்து பலியானோர் எண்ணிக்கை மட்டுமே 10 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒழிக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம், தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த கள்ளச்சாராயம் குடித்தும் பலர் பலியாகி வருகின்றனர். அது மட்டுமின்றி சரக்கு கிடைக்காத ஏக்கத்திலும், விரக்தியிலும் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாக கூடி வருவதும் தமிழகத்தில் பீதியைக் கிளப்பி வருகிறது என்றே கூறலாம்.
இதனிடையே நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரகாசி என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மாயகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தர்ராஜிவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மெத்தனால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எழில்வாணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







