--- --:--:-- --

“தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு!!” பிரதமரின் அறிவிப்பு வெளியாகும் முன் தமிழக அரசு திடீர் உத்தரவு!!

00

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மேலும்16 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி நாளை உரை நிகழ்த்த உள்ள நிலையில், மத்திய அரசு எடுக்கும் முடிவை தமிழக அரசு ஏற்கும் என 2 நாட்களுக்கு முன் அறிவித்திருந்த தமிழக அரசு, திடீரென ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இப்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பதே அனைத்து மாநிலங்களின் கருத்தாக உள்ளது. இதையே இரு நாட்களுக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நட்த்திய ஆலோசனைக் கூட்டத்திலும் பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தி இருந்தனர். பிரதமருடனான ஆலோசனைக்கு முன்னதாகவே ஒடிசா, பஞ்சாப் மாநில அரசுகள் ஊரடங்கை நீடிப்பதாக அறிவித்திருந்தன.

 

மற்ற மாநிலங்களோ ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை பிரதமர் மோடி உடனடியாக அறிவிப்பார் என எதிர் பார்த்தன. ஆனால் பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாக தாமதமான நிலையில், மகாராஷ்டிரா, மே.வங்கம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தன்னிச்சையாக அறிவித்துவிட்டன. ஆனால் தமிழக அரசுத் தரப்பிலோ, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவை தமிழக அரசு பின்பற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்திருந்தன. ஊரடங்கை நீட்டிப்பதில் தயக்கம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார்.

 

இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ள நிலையில், இன்று மாலை தமிழக அரசு திடீரென ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30-ந் தேதி 16 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கை தளர்த்தினார் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 30-ந் தேதி நீடிக்கும்.

 

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும்.பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்படும்.

 

கட்டடத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 2வது முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கத் தடையில்லை. ஆனால் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவே தமிழக அரசின் முடிவு என 2 நாட்களுக்கு முன்னர் தான் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென தமிழக அரசு தன்னிச்சையாக ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon