கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா !!!
தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழப்பும் ஒன்று கூடுதலாகி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக கொரோனா நிலவரம் பற்றிய தகவலை சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார். இந் நிலையில் இன்று தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும் அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 9 11 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் 71 வயது பெண் இன்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்றவர்களில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பலரும் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தவர்கள். இதில் 23 பேருக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி? என்பது இன்னும் தெரிய வரவில்லை என்றார்.

தற்போதைய புள்ளி விபரப்படி வைரஸ் தொற்று பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை. 2-ம் கட்டத்தில் தான் உள்ளது. 3 -ம் கட்டத்திற்கு செல்லக் கூடாது என்பதற்காகவே கடுமையாக போராடி வருகிறாம். எனவே சமூகப் பரவல் இல்லை; மக்களும் அச்சப்பட வேண்டாம். அதிவிரைவு கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளதால், மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சரியாகும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவக் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய,மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 60 ஆக மட்டுமே இருந்தது.கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 86 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







