கொரோனா : வீடு களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை பராமரிப்பது எப்படி? தமிழக அரசு அறிவுரை!!
கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை பராமரிக்க கழிப்பறை வசதியுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
கொரோனாை வைரஸ் பரவல் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் வேகம் எடுத்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ததமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை பராமரிப்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு, குறிப்பிட்ட நபர் மட்டுமே
பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.
தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, அடுத்த கட்டமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் அதிவிரைவு பரிசோதனை கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.இந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனைகள் தொடங்க உள்ளதால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதா? என்பதும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




