கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை இப்படிதான் அடக்கம் செய்கிறார்கள்!
கொரொனா பாதிப்பில் உயிரிழந்தவரின் முகத்தைக் கூட கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாத சோகமான நிலை நிலவுகிறது. வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்தவர் உடலுக்கு கையாளப்படும் நடைமுறை என்ன? கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நபரின் உடலில் எத்தனை காலம் வைரஸ் உயிருடன் இருக்கும் பரவுமா? என்ற கேள்விகளுக்கு இதுவரை உலக அளவில் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அடக்கம் செய்யும் முறையே கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் வேலூரில் உயிரிழந்த நபரின் அடக்கமும் நடந்தது. அவரது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துணியை கொண்டு மூன்று அடுக்குகளுடன் சூட்டப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து வாகனத்தில் உள்ளாட்சி துறை பணியாளர்கள் 5 பேர் மூலம் கொண்டுபோய் வைக்கப்பட்டது.
இவர்கள் 5 பேரும் முழு உடல் பாதுகாப்பு உடை கவசங்களை அணிந்து கொண்டு இருந்தனர். உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிகளவு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. அதில் உடல் இறக்கப்பட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில் உறவினர்கள் யாரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை.
மதச் சடங்குகளும் இருந்தபடி தள்ளி நின்றபடியே நடந்தது. இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இவர்களுக்கு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடைசியாக ஒருமுறை இறந்தவரின் முகத்தை கூட பார்க்க விடாத துயரத்தை ஏற்படுத்துகிறது.






