தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! சென்னையில் 64 வயது பெண் ஒருவரும் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதாகவும், சென்னையைச் சேர்ந்த 64 வயது பெண் இன்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பட்டியல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே அதிக எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. நேற்று 621 ஆக இருந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 69 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதில் 63 பேர் ஒரே இடத்திற்கு சென்று வந்தவர்கள் எனவும், 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற 3 பேரில் ஒருவர் வெளி மாநிலம் சென்று வந்தவர், மற்றொருவர் வெளிநாடு சென்று வந்தவர், மீதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்று ஆராய்ந்து வருவதாக தெரிவித்த பீலா ராஜேஷ், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 64 வயது பெண் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 5539 பேரிடம் ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
அதிவிரைவு கொரோனா அறிகுறி சோதனைக்கான கருவிகள் இன்னும் ஓரிரு நாளில் வந்த பிறகு வீட்டுக் கண்காணிப்பில் உள்ள 66,431 பேரிடம் முதலில் பரிசோதனை நடத்தப்படும் எனவும், அதன் பிறகு கொரோனா அறிகுறி சந்தேகம் இருப்போரிடமும் சோதனை தொடரும் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இன்று கெரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களில் 39 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் இதனால் சென்னையில் மட்டும் மொத்தம் 149 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், திருப்பூரில் 13, தூத்துக்குடியில் 6, மதுரையில் 5 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொத்தம் 34 மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.






