“என்னே கருணை!!” ‘சரக்கு’ கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 7 பேர் தற்கொலை செய்த விவகாரம்! ‘குடி’ அடிமைகளுக்கு மது வழங்க முதல்வர் பினராயி உத்தரவு!!
கேரளாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு கிடைக்காத விரக்தியில் இதுவரை 7 பேர் தற்கொலை செய்துள்ள பகீர் தகவல் வெளியான நிலையில், மதுவுக்கு அடிமையானவர்கள், மருத்துவ சான்றிதழுடன் வரும் பட்சத்தில் சரக்கு சப்ளை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ளது. இந்த திடீர் முடக்கத்தால் ஏழை ,பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். வேலை இல்லை… வருமானமும் இல்லை…இதனால் வயிற்றுப் பசியை போக்குவது எப்படி என்பது தான் பலரின் கவலையாக உள்ளது.
ஆனால், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தினசரி மது குடித்து பழக்கப்பட்ட குடிமகன்களின் பிரச்னையோ, சரக்கு கிடைக்கவில்லை என்பது தான் பெரும் பிரச்னையாகியுள்ளது. இதனால் போதைக்கு அடிமையாகி பழக்கப்பட்டு விட்ட பலரும் பைத்தியம் போல் பித்துப் பிடித்து அலைய ஆரம்பித்துள்ளனர்.

இதில் உச்ச கட்டமாக கேரளாவில், சரக்கு கிடைக்காத விரக்தியில், கடந்த சில நாட்களில் மட்டும் குடிமகன்கள் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு உறுதி செய்யப்பட்டது.
இதனால், கடந்த 2 மாதங்களாக அம்மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கையாக மக்களை வீடுகளில் முடங்கச் செய்து, அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கான பணிகளை திறம்பட கையாண்டு வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகளுக்கு பெரும் பாராட்டு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சரக்கு கிடைக்காமல், மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்து வரும் பிரச்னைக்கும் தீர்வு காண முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.மதுவுக்கு அடிமையானவர்கள், உரிய மருத்துவ சான்றிதழுடன் வரும் பட்சத்தில் அவர்களுக்கு மதுபானம் சப்ளை செய்யப்படும் என்றும், மேலும் ஆன்லைன் மூலம் மதுபானம் சப்ளை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளது அம்மாநில குடிமகன்களுக்கு, சரக்கு அடிக்காமலே உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.







