சொந்த ஊர் திரும்புவதை தடுப்பதற்காக அரசு நிவாரணம் அறிவிப்பு!
தெலுங்கானாவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதை தடுக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் பணம் மற்றும் 12 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 25 ஆம் தேதியிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு வேலை செய்வதற்காக புலம்பெயர்ந்தவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாங்கள் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
மேலும் நம்முடைய குடும்பம் போன்று அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியவர் ஒவ்வொருவருக்கும் 12 கிலோ ரேஷன் பொருட்களுடன் 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.






