தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது…! மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிப்பு!!
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 1-ந் தேதி வரை இந்தத் தடை என்பதால், வெளியூர்களில் இருப்போர் சொந்த ஊர்களுக்கு அலறியடித்து கிளம்பியதால் தமிழகமே இன்று ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று முதலில் அந்த நாட்டில் மட்டுமே கோரத் தாண்டவம் ஆடியது. இந்த வைரசின் அச்சுறுத்தல் சீனாவுக்கு மட்டும் தான்; நமக்கெல்லாம் வராது என்பது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உலக நாடுகள் சீனாவை வேடிக்கை பார்த்தன.
ஆனால், சீனாவில் இருந்து மெல்ல மெல்ல அண்டை நாடுகளுக்கு பரவி இப்போது உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி அலறவிட்டுள்ளது இந்த கொரோனா தாக்குதல் .இதனால் சீனாவை கைகட்டி வேடிக்கை பார்த்ததின் விளைவை இப்போது உலக நாடுகள் பலவும் தாங்க முடியாத சோதனையாக அனுபவித்து வருகின்றன. இந்த மார்ச் முதல் வாரத்தில் சீனாவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்த போது பிற நாடுகளில் உயிரிழப்பு சொற்ப அளவில் இருந்தது.

இப்போது இன்றைய நிலவரப்படி சீனாவில் உயிரிழப்பு கட்டுக்குள் இருக்க, உலக அளவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது கொரோனா. இதில் இத்தாலியில் 2 வாரத்தில் பலியானோர் மட்டும் 6 ஆயிரம் ஆகும்.அடுத்து ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை தினமும் நூற்றுக் கணக்கில் உயர்ந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக இந்தியாவிலும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 524 ஆகவும், உயிரிழப்பு 10 எனவும் உள்ளது. ஆனால் இந்த நோய்த் தொற்று தற்போது வரை இரண்டாம் ஸ்டேஜில் உள்ள நிலையில், 3-ம் ஸ்டேஜான சமூகத்தினிடையே பரவும் அபாயத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இப்படி 3-ம் கட்டத்தில் பொது மக்களிடையே வைரஸ் தொற்று பரவினால், 130 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில், உயிரிழப்பு என்பது நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்; கட்டுப்படுத்துவதும் பெரும் துயரமாகி விடும் என்ற ஒரு அபாய கட்டத்தில் இந்தியா உள்ளது.
இதனாலேயே, அப்படி ஒரு மோசமான கட்டத்துக்கு சென்று விடுவதை தடுக்க மக்களை தனிமைப்படுத்த கடந்த சில நாட்களாக கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட, பல மாநில அரசுகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதனால் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என முடக்கியுள்ளன. தமிழகத்திலும் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரையிலான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும்; மற்ற அனைத்தும் மூடப்படும்; முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பால், வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு அவசரகதியில் படையெடுத்தனர். இதனால் இன்று மாலை 6 மணி வரை சாலைகளில் பரபரப்பான வாகனப் போக்குவரத்து இருந்த நிலையில் 6 மணிக்கு மேல் மெல்ல குறைந்து வெளிச்சோடி கிடக்கின்றன.மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், தமிழகமே ஒரு நிசப்தமான நிலைக்கு சென்றுள்ளது என்றே கூறலாம்.







