--- --:--:-- --

“இது தான் கொரோனா பரவாமல் தடுக்கும் லட்சணமா?” பேருந்து வசதியின்றி கும்பல் கும்பலாக பரிதவித்த லட்சக்கணக்கானோர்!!

3

கொரோனா முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பால், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் முன்னெச்சரிக்கையாக போதிய பேருந்து வசதிகளை அரசுத் தரப்பில் செய்யாததால் கூட்டம் கூட்டமாக மக்கள் பரிதவித்த காட்சிகளைப் பார்த்து இது தான் கொரோனா பரவலை தடுக்கும் லட்சணமா? என்ற கேள்விகளை எழச் செய்து விட்டது.

 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் லேட்டாக எடுத்தாலும், இப்போது துரித கதியில் அவசர அவசரமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், உரிய திட்டமிடாமல், முன்னெச்சரிக்கை இன்றி பல்வேறு குளறுபடியான அறிவிப்புகளால் அப்பாவி பொது ஜனங்களின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.

 

விஸ்வரூபமெடுத்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் பொது வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும்; நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்துதல் மிக மிக அவசியம் என்பதை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மக்களை தனிமைப்படுத்த 144 தடை போடப் போகிறோம்; முன் ஜாக்கிரதையாக அவரவர் வீடுகளுக்கு, சொந்த ஊர்களுக்கு சென்று விடுங்கள் என்று அவகாசம் கொடுத்து அறிவித்துவிட்டு, அதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தராமல் பல லட்சம் பேரை நடுரோட்டில் அல்லாட விட்ட கொடுமை நேற்று அரங்கேறியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேற்று பிற்பகல் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நாளை (இன்று) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்தும் முடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

 

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒரு வித பதற்றத்துக்கு ஆளானார்கள் என்றே கூறலாம். வெளியூர்களில் தங்கி பணிபுரிவோருக்கு சொந்த ஊர்களுக்கு பத்திரமாக சென்று சேர வேண்டுமே என்ற பதற்றம் ; உள்ளுரில் இருப்பவர்களுக்கோ பத்து நாட்களுக்கு காய்கறி, மளிகை சாமான் வேண்டுமே என்ற கவலை. இதனால் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்த மக்கள் காய்கறிகளை வாங்கிக் குவிக்க, அவற்றின் விலையும் மூன்று மடங்குக்கும் மேல் எகிறியது. காய்கறி மார்க்கெட்டுகளில் இருந்த அனைத்து வகை காய்கறிகளும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. கொரோனா பரவுமே என்ற அச்சமெல்லாம் யாருக்கும் இல்லை என்பது போல, மார்க்கெட்டுகள் ஜன நெரிசலில் திண்டாடியது.

 

ஆனால், தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர் என்றில்லாமல், அனைத்து நகரங்களிலும் சொந்த ஊர் செல்ல மக்கள் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்த மக்கள் பட்ட பாடு தான் கொடுமையிலும் கொடுமை. ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த பேருந்துகளில் பாதி அளவு கூட இயக்கப்படாததால் பரிதவித்தனர். கிடைத்த பேருந்துகளில் இடம் பிடிக்க ஜன்னல் வழிகளில் எல்லாம் தொற்றினர். கொரோனாவை வரவிடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி தேவை என்று விழிப்புணர்வு வாசகங்கள், பிரச்சாரங்கள் எல்லாம் அடியோடு காணாமல் போனது. பேருந்துகளில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு 10 மணி நேரம் வரை கூட ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு பயணித்த அவலம் அரங்கேறியது.

இதில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் உச்சகட்ட அவலங்கள் அரங்கேறின. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள் தான். அதிலும் பேச்சலர்கள் தான் அதிகம். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்தனர் எனலாம். ஆனால் பேருந்து வசதி சொற்பமாக இருக்க திண்டாடிப் போய் விட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தே சென்றது. ஒரு பக்கம் கொரோனா பீதி மறுபக்கம் பேருந்து கிடைக்கவில்லையே என்ற கவலையில் நடு ரோட்டில் அல்லாடியது பெரிய கொடுமை தான்.

 

இந்த நெரிசலை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் அடித்த கொள்ளை தான் எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்ற கொள்ளை நடந்தேறியது.சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ 2500 வரை சகட்டுமேனிக்கு வசூலித்தனர். இப்படி பேருந்துகளுக்காக ஏராளமானோர் தவிப்பதை டிவி நேரலைகளில் கண்ட பலரும் பரிதவித்துப் போய், கொரோனா பீதியில் பதைபதைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனடியாக டுவிட்டரில், கொரானா, 144 என்ற சூழலில் வெளியூர்வாசிகளுக்கு பேருந்து வசதி செய்யாமல் சாலையில் நிற்க வைப்பதா? என பதிவிட்டு சாடினார்.

 

இப்படியாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல நகரங்களில் மக்கள் பேருந்துக்காக கூட்டம் கூட்டமாக அல்லாடி, பரிதவித்த நிலையைப் பார்த்து, கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் லட்சணம் இதுதானா? என அலட்சியம் காட்டிய அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon