பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை..!கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை !!!
கோவை மாவட்டத்தில் அமைதி நிலவ இரு தரப்பு கூட்டம் நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு மற்றும் அமைதி பேணிக் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும்,கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இரு தரப்பினர் கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும்,கோவையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக விரும்ப தகாத செயல்கள் நடந்து வருகிறது எனவும், அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களும், அச்சமின்றி அமைதியாக இருக்க காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,இரு தரப்பு கூட்டங்கள் நடத்தி அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு காக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக இரு தரப்பினரும் உறுதியளித்துள்ளனர் எனவும் அவர் கூறினார். இயல்பு நிலை திரும்ப கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அமைதி நிலவ வேண்டும் என்பதை தான் மக்கள்,மாவட்ட நிர்வாகம், அரசு எதிர்பார்க்கிறது எனவும் கூறிய அவர், அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும்,அமைதியை நிலைநாட்ட காவல் துறை முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும், இன்னும் சில வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அமைதிக்கு பங்கம் விளைவித்தால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைதி ஒன்றே நோக்கம். அதை சிதைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட மாட்டோம் எனவும் அவர் கூறினார்.
மேலும்,சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்கள் மற்றும் விஷம பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்கள் கவனமான அணுக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் அச்சமின்றி இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்த அவர் சிஏஏ எதிர்ப்பு போராட்ட விவகாரத்தில் சுமூக தீர்வு வருமென எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.
மேலும்,கோவை மாவட்டத்தில் கரோனோவினால் பயப்படும் படியாக எந்த நிகழ்வும் இல்லை எனவும், கரோனோ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்கரோனோ அறிகுறிகளுடன் வருபவர்களை விமான நிலையம், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தனியாக ஆய்வு செய்து 100 விழுக்காடு தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது எனவும், சளி, காய்ச்சலுடன் வருபவர்களை தனியார் மருத்துவமனைகள் கவனமாக அணுக வேண்டும் எனவும் கூறிய அவர், கரோனோ அறிகுறி இருந்தால் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தியுள்ளதாக என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




