--- --:--:-- --

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா..! ராமேஸ்வரத்திலிருந்து 2881 பேர் படகில் பயணம்!!

1

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இராமேஸ்வரத்திலிருந்து பயணம் செய்யும் யாத்திரிகர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் வாழ்த்துகள் கூறி வழியனுப்பி வைத்தார்.

 

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் இரண்டு தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் 3,004 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்விண்ணப்பங்களின் மீதான பரிசீலனையின் அடிப்படையில் 2,291 ஆண்கள்,492 பெண்கள்,98 குழந்தைகள் என மொத்தம் 2,881 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்கின்றனர் . இவர்கள் பாதுகாப்பாக சென்றுவர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருவிழாவிற்கு 74 விசைப்படகுகள்,24 நாட்டுப்படகுகள் என மொத்தம் 98 படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இப்படகுகள் மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதித்தன்மைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது.அனைத்து படகுகளிலும் உயிர்காப்பு மிதவை, உயிர்காப்பு கவசம் (LifeJacket) தீயணைப்பு கருவிகள்,முதலுதவிப் பெட்டி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

வருவாய் துறை,காவல் துறை,மீன்வளத் துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, உளவுத்துறை பணியகம்,தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம்,நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களை ஒருங்கிணைத்து 76 குழுக்கள் அமைக்கப்பட்டு 755 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும்,இந்திய கப்பற்படையைச் சார்ந்த 2 ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படையைச் சார்ந்த 3 படகுகள்,2 ஹோவர்கிராப்ட் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்லும்போது படகுகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும்,படகுகளில் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் அனைத்து யாத்திரிகர்களிடமும் அறிவுறுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லாதவாறு முழுமையாக கண்காணிக்கப்பட்டுள்ளது .

யாத்திரிகர்கள் வழியனுப்பும் இடத்தில் அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மருத்துவக் குழுக்கள் , 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவக் குழுவும் , தீயணைப்பு மீட்பு பணிகள் குழுவும் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும்,குடிநீர் வசதி,கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் ரூபேஷ்குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார், இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, சுங்கத்துறை துணை ஆணையர் ஜெய்சன் பிரவீன்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.லயோலா இக்னேஷியஸ், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon