குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…! தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பால் பரபரப்பு!!
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறி வருகின்றன. மேலும் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மேலும் சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் அனுசரணையுடன் உள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான நிலையை திடீரென எடுத்துள்ளார். அம்மாநில சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நேற்றிரவு அமைச்சரவையை கூட்டி பலமணிநேரம் விவாதித்தார். தொடர்ந்து சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வரும் கட்சிகள், சிஏஏக்கு எதிராக கிளம்பியுள்ள நிலையில், பாஜகவுடன் நட்பு பாராட்டும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி இந்த முடிவை திடீரென எடுத்துள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் சந்திரசேகர் ராவின் இந்த திடீர் முடிவுக்கு தெலுங்கானா மாநில மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




