டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு ..! முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டுக்கள்!!
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கிடையாது; டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்குத் தான் பொது மக்களும், அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் ஏகோபித்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
சோழ மண்டலம் சோறுடைத்து என்று ஆதி காலம் முதலே நெற்களஞ்சியமாக திகழ்வது தஞ்சைத் தரணி. தற்போது தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் என டெல்டா மாவட்டங்கள் எனப்படும் காவிரி பாயும் இந்த வளமான பூமியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் , ஈத்தேன் என பூமிக்கடியில் இருக்கும் வளங்களை சுரண்ட மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டது.
ஆனால், இந்தத் திட்டங்களால் சோலைவனமாக இருக்கும் காவிரி டெல்டா பகுதி சோலைவனமாகி விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய ஊர்களில் நெடு நாட்களாக நடந்த தொடர் போராட்டங்கள் உலகப் பிரசித்தம்.
அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், அமைப்புகள், திரையுலகினர் என ஒட்டு மொத்த தமிழகமே ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக திரண்டனர்.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்தது. இப்படி கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இத்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் திடீரென கடந்த மாதம் இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் முனைப்பு காட்டியது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை; பொதுமக்களிடம் கருத்தும் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவிக்க, தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் இதுவரை கண்ணை மூடி ஆதரவளித்த வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது தமிழக மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் தலை வாசலில், தெற்காசியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பதற்கான திட்டங்களில் கையெழுத்துப் போட்டதே மு.க.ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை. டெல்டா மாவட்டங்கள் சிறப்புஒரே ஒரு அறிவிப்பால் .. வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும். இதற்கான தனிச் சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளின் வேதனைகளை புரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என முதல்வர் எடப்பாடி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் , மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு எடுத்துள்ள மிக மிக உருப்படியான முடிவு என ஒட்டு மொத்தமாக பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன. டெல்டா மாவட்டங்களிலோ விவசாயிகளும், பொதுமக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அரசு எடுத்துள்ள இந்த திடீர் நிலைப்பாடு தமிழக அரசியலிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.






