--- --:--:-- --

பிரியாவிடை பெற்ற யானைகள்.முகாம் நிறைவு பெற்றதை ஒட்டி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!

17

யானைகள் முகாம் இன்றுடன் நிறைவு.அமைச்சர்கள் வேலுமணி,சேவூர் ராமச்சந்திரன்,திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு யானைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.

 

தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஆட்சி காலத்தில் புத்துணர்வு முகாம்கள் நடைபெற்றன.அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கியது.

 

48 நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 28 யானைகளுக்கும் சத்துள்ள உணவு,மருத்துவ சிகிச்சைகள்,காலை,மாலை இரு வேளைகளிலும் நடைப்பயிற்சி,ஷவர் குளியல் என யானைகளை புத்துணர்ச்சிக்காக நடைபெற்றன.மேலும்,பாகன்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் முகாம் துவங்கி 48 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று யானைகள் அந்தந்த கோவில்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

 

மேலும்,48 நாட்கள் முகாமில் ஒன்றாக பழகிய யானைகள் முகாம் இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி லாரிகளில் ஏற்றப்பட்டு வருகின்றன.முகாமில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் யானை ராமலட்சுமியும்,கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோவில் யானை கல்யாணியும் இணை பிரியாத நண்பரகளாக பழகி வந்தன.யானைகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு வரும் நிலையில் ராமலட்சுமியும்,கல்யாணியும் ஒருவரையொருவர் பிரிய மனமில்லாமல் துதிக்கையால் ஒன்றையொன்று கட்டித்தழுவி பாசத்தை காண்பித்தது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

 

மனிதர்களிலேயே அண்டை வீட்டினருடன் பழகாமல் பாசமில்லாமல் இருக்கும் நிலையில் இவ்விரு யானைகளும் தங்களது நட்பினை வெளிப்படுத்தி வரும் நிகழ்வு மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்த்துக்கொள்ள ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

 

முகாம் நிறைவு நாளான இன்று யானைகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல லாரிகளில் ஏற்றப்பட்டு வருகின்றன.இன்று மாலை யானைகளை வழியனுப்பும் நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,ஓ.கே.சின்னராஜ்,வி.பி.கந்தசாமி,மாவட்ட மாணவரணி செயலாளர் நாசர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக யானைகளை பராமரிப்பது குறித்த கையேட்டினை அமைச்சர்கள் பாகன்களுக்கு வழங்கினர் பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் வனத்துறை யானைகளுக்கான சாடிவயல்,டாப் சிலிப்,நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை முகாம்களில் உள்ள யானைகளுக்கு அந்தந்த பகுதியிலேயே புத்துணர்வு முகாம் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon