நிர்வாணமாக்கி நித்தி சீடர் கொலை..! காரில் கிடந்த சடலம்
புதுச்சேரியில் ஏம்பளம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல். 45 வயதான இவர் நித்யானந்தாவின் தீவிர பக்தராக இருந்து பின்னர் சீடராக மாறியுள்ளார். வில்லியனூர் மற்றும் ஏம்பளம் பகுதிகளில் நித்யானந்தாவின் பெயரில் பேக்கரி கடை நடத்தி வரும் வஜ்ரவேல் பாகூரை அடுத்த ஒரு பகுதியில் புதிதாக கடை திறக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஏம்பலத்தில் கடையை அடைத்துவிட்டு குருவிநத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு லட்சம் ரூபாய் பணம் வாங்க புறப்பட்டுள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய அவர் திடீரென மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வஜ்ரவேலை தேடியபோது குருவிநத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்குள் நிர்வாண நிலையில் வஜ்ரவேல் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பணத்துடன் வந்த வஜ்ர வேலை யாரோ மர்ம ஆசாமிகள் காருடன் கடத்திச்சென்று தலையை பாலிதீன் கவரால் மூடி கொலை செய்துவிட்டு அவரது சடலத்தை நிர்வாணமாக்கி காரின் பின்பக்க இருக்கை அருகே படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைலாச செல்வதாக கூறி சென்ற நித்தியின் சீடர் ஒருவர் நேபாள எல்லையில் அனாதை சடலமாக கிடந்த நிலையில், நித்தியின் அதிதீவிர சீடர் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் கொல்லப்பட்டு இருப்பது நித்தியின் கைலாச வாசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.






