--- --:--:-- --

திருப்பூர் போயம்பாளையம் ராஜா நகர் ரேசன் கடை பகுதியில் தொடரும் ரேசன் பொருட்கள் கடத்தல்

1

போயம்பாளையம் பகுதியில் சினிமா படப்பாணியில் பல கிலோமீட்டர் துரத்தி சென்று ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் போயம்பாளையம் ராஜா நகர் ரேசன் கடையிலிருந்து ரேசன் அரிசி கடத்தி சென்ற நபரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் மற்றும் அரிசி கடத்திய நபரையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்து சென்றதால் பரபரப்பு

 

ரேஷன் கடையிலிருந்து அரிசியை கள்ள சந்தையில் விற்க கடத்தியதாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

 

திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் போயம்பாளையம் ராஜா நகர் இரண்டாம் வீதியில் ராஜா நகர் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலிருந்து அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் சில நபர்களால் கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று காலை சுமார் 11. 30 மணியளவில் ராஜா நகர் ரேசன் கடையிருந்து ஒருவர் அரசி உள்ளிட்ட பல்வேறு ரேசன் பொருட்களை 2 சக்கர வாகனத்தில் கடத்தி செல்வதை கண்ட இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அரிசி கடத்திய வாகனத்தை சினிமா படப்பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்து உள்ளனர் . அப்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வடக்கு தாசில்தார், காவல் துறை அதிகாரிகள், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியிலுள்ள திருப்பூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கடத்தல் அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட போயம்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த மாரிமுத்து வயது- 53 என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்துவதற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து இப்பகுதி பொது மக்கள் கூறுகையில் :-

 

இந்த ரேசன் கடை சரியான நேரத்தில் திறப்பதில்லை. இந்த கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்களின் எடை அளவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தொடர்ந்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கடத்தி சென்று கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை .

 

கடந்த சில மாதங்களாக இங்குள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த ரேசன் கடையில் ரேஷன் அரிசி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் வருகிறது.

 

அரிசி, சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், வறுமைகோட்டில் உள்ளவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். இந்த 20 கிலோ அரிசியில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி கலந்து வினியோகிக்கப்படும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கண்ட ரேஷன் கடையில்  20 கிலோ இலவச அரிசியில் பலருக்கு 5 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் பச்சரிசி தான் வழங்கப்படுகிறது. புழுங்கல் அரிசி பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. மேலும், பல குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியே கிடைப்பதில்லை. இதனால் வறுமை கோட்டில் உள்ளவர்கள் அரிசி கிடைக்காமல் பெரும் சிரமப்படுகின்றனர்.

 

இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி தொடர்ந்து முறைகேடுகள் ஈடுபட்டு வரும்  ரேசன் கடை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்து திருப்பூர் வடக்கு குடியுரிமை தாசில்தார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராஜா நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை சினிமா படப்பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon