71-வது குடியரசு தின விழா : நாடு முழுவதும் கோலாகலம்..! வண்ணமிகு அணிவகுப்பு!!
நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, பிரமாண்ட குடியரசு தின பேரணி நடைபெற்றது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து வண்ணமிகு அணிவகுப்பு ஊர்வலத்தை பார்வையிட்டனர்.
71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற சீர்மிகு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து குடியரசு தின விழா பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படை வீரர்களின் அணிவகுப்பும், ராணுவ தளவாடங்களின் ஊர்வலமும் நடைபெற்றது.

ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி, பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் ஊர்வலத்தில் பங்கேற்றன. விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ள பிரேசில் அதிபர் போல்ஸ்னராவுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என முக்கிய விஐபிக்கள் இந்த பிரமாண்ட பேரணியை கண்டு களித்தனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு வளையத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.முன்னதாக பிரதமர் மோடி, டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழா மாநில தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சென்னையில் காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




