ரஜினியை மிரட்டிப் பார்க்க நினைத்தால் நடக்காது! ரஜினிக்கு ஒன்றும் தெரியாது
ரஜினி ரசிகர்கள் பெரியார் விவகாரத்தில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்தும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளதாக கூறினார்.
ரஜினி ரசிகர்கள் இந்த பிரச்சனையில் பொறுமை காப்பது தமக்கு சங்கடமாக உள்ளது என்றும், பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை ரஜினி பேசியதில் தவறில்லை என்றும், அவரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி விவகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகளை பழி தீர்க்க முயற்சி நடப்பதாக கூறி ராஜேந்திரபாலாஜி ரஜினியை மிரட்டி பார்க்க நினைத்தால் அது நடக்காது என்றும் கூறினார்.

தந்தை பெரியார் பற்றி நடிகர் ரஜினிக்கு தலையும் புரியாது வாலும் புரியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக்கணக்கு குழு தலைவரான துரைமுருகன் நாமக்கலில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் தந்தை பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், விவாதப் பொருளாக இன்றும் நிலைத்து நிற்பதாக கூறினார். பெரியாரைப் பற்றி ஸ்டாலின் சொன்னதுபோல ரஜினிகாந்திற்கு தலையும் தெரியாது வாலும் தெரியாது என துரைமுருகன் விமர்சித்தார்.






