--- --:--:-- --

ரஜினிகாந்த்-க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

5

பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

பெரியார் பற்றிய பொய்யான தகவலை பரப்பி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த் மீது மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை நகர தலைவர் நேரு தாஸ் வழக்கை தொடர்ந்துள்ளார். ரஜினிகாந்த் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தமது மனுவில் அவர் கூறியுள்ளார். இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிட விடுதலை கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா வழியாக திராவிடர் விடுதலை கழகத்தினர் பேரணியாக சென்றனர்.

 

இதில் ரஜினிகாந்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் போயஸ் கார்டனில் இருந்த தடுப்புகளை மீறி சென்றதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon