அதிநவீன வசதிகளுடன் கூடிய அம்மா திருமண மண்டபம்
தமிழகத்தில் முதன்முறையாக மாநில அரசு சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அம்மா திருமண மண்டபம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அரசியல் சமுதாய கூடங்களில் இருந்து மாறுபட்டு மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த இந்த திருமண மண்டபம் மூன்று தளங்களில் அதிநவீன வசதிகளுடன் அமைந்துள்ளது. தரைதளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்த வசதி, சூரியசக்தி மின் விளக்கு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, தீயணைப்பு கருவிகள், அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரண்டாவது தளத்தில் வண்ண விளக்கு அலங்காரங்கள், மண மக்களுக்காக ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல மூன்றாம் தளத்தில் நூறு பேர் தங்கும் வசதிகளுடன் விருந்தினர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தளங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.






