டெல்லி போராட்டம் : பல முறை போலீசுக்கு “டிமிக்கி” கொடுத்த பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத் சரண்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் போலீசின் சிக்கி அடுத்தடுத்து தப்பிய பீம் சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று காலை போலீசில் தாமாகவே சரணடைந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நேற்று நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டிருந்தனர். பின்னர் மசூதி முன் சாலையில் திரளாகக் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பீம் சேனா எனப்படும் தலித்களுக்கான அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் பங்கேற்றார்.
சந்திரசேகர் ஆசாத் பங்கேற்கும் போராட்டங்கள் என்றாலே வட மாநிலங்களில் போலீசுக்கு பெரும் தலை வலியாகி விடும். இதனால் சந்திரசேகர் ஆசாத்தை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் கூட்டத்தினர் மத்தியில் அவர் ரகசியமாக பதுங்கியபடி போராட்டத்தை வழி நடத்தினார். போராட்டக்காரர்களும் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர். ஒரு வழியாக ஆசாத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய முயன்றாலும் தப்பித்தே வந்தார்.
நேற்று நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்ற நிலையில், போலீசின் பிடியில் ஒரு முறைக்கு மூன்று முறை சிக்கிய ஆசாத், தொடர்ந்து டிமிக்கி கொடுத்தே வந்தார்.கடைசியில் ஜும்மா மசூதிக்குள் பதுங்கிக் கொண்டு, போராட்டக்காரர்களிடம் ஆவேச உரை நிகழ்த்திய ஆசாத், முடிந்தால் மசூதிக்குள் நுழைந்து கைது செய்யுங்கள் என போலீசுக்கும் சவால் விட்டார்.
ஆனால் போலீசாரோ மசூதிக்குள் நுழைந்தால் பிரச்னை வேறு விதமாக வெடிக்கும் என முடிவு செய்து, ஆசாத் வெளியில் வந்தால் கைது செய்ய இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், இன்று அதிகாலை டுவிட்டரில் போலீசுக்கு ஒரு பதிவை அனுப்பிய ஆசாத், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கண்டிசன் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் மசூதியை விட்டு வெளியில் வந்த ஆசாத், தாமாகவே போலீசில் சரணடைந்தார்.





