காலையிலேயே களைகட்டிய “பிரியாணி” விருந்து..! தடுக்க விரைந்த தேர்தல் ‘பறக்கும் படை’..! திண்டுக்கல் அருகே பரபரப்பு!!
திண்டுக்கல் அருகே காலையிலேயே அசைவ பிரியாணி விருந்து தடபுடலாக நடக்க, ஓட்டுக்காக இந்த விருந்து உபசரிப்பும் கூடவே பணமும் வழங்கப்படுவதாக தீயாய் செய்தி பரவியது. இதனால் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து சென்று சோதனை நடத்தியது பரபரப்பாகி விட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் தேர்தல் என்றாலே, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், இலவசமாக விதவிதமான பொருட்கள் என கவனிப்பு நடப்பது சமீப காலமாக வாடிக்கையாகிவிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் என்பதால், ஊர், ஊருக்கு வேட்பாளர்களாக பலர் போட்டியிடுகின்றனர். இதனால் உள்ளூர் மக்களுக்கு போட்டி போட்டி ஏக கவனிப்பு நடக்கப் போவது நிச்சயம் தான்.
தற்போது, வேட்பு மனுத்தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பலரும் வீடு, வீடாக வாக்கு சேகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், வாக்காளர்களை ஐஸ் வைக்க என்ன செய்யலாம் என புதுப்புதுவிதமாக யோசிக்கத் தொடங்கி விட்டனர். பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடத்த பலரும் திட்டமிட்டு வருகின்றனர். வாக்காளர்களும் எவ்வளவு வசூலாகும் என இப்போதே கணக்குப் போட ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறலாம்.
இந்த நிலையில், திண்டுக்கல் அருகே இன்று காலையிலேயே ஒரு மில்லில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயாரித்து தடபுடல் விருந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது. செட்டிநாயக்கன்பட்டி என்ற ஊராட்சியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் தான் இந்த விருந்து நடந்தது. ராத்திரியோடு ராத்திரியாக பிரியாணி தயாரிக்கப்பட்டு, காலை 9 மணிக்கே விருந்து களைகட்டியது. இதனை சுவைக்க சுற்றுப் பகுதி மக்களும் பெருமளவு கூடி விட்டனர். பஃபே ஸ்டைலில் பிளேட்டில் வழங்கப்பட்ட பிரியாணியை நீ..ண்ட வரிசையில் நின்று வாங்கி நின்றபடியேயும், தரையில் அமர்ந்தும் ஏராளமானோர் ருசிக்க ஆரம்பித்தனர்.

இது தேர்தல் நேரமல்லவா? அதுவும் விருந்து நடந்த மில்லின் உரிமையாளர் பாஸ்கரும், தற்போது செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வளர்மதி என்பவரும் நெருங்கிய உறவினர்களாம். இதனால் ஓட்டுக்காகவே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பதாகவும், கூடவே தலைக்கு ரூ.500 வீதம் பணமும் பட்டுவாடா செய்வதாகவும், வளர்மதியின் எதிர்த்தரப்பினர், அவசர அவசரமாக புகாரை தட்டிவிட்டுள்ளனர்.
உடனே, பெரும் போலீஸ் பட்டாளத்துடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிரியாணி விருந்து நடக்கும் மில்லுக்கு விரைந்தனர். இதைக் கண்ட பிரியாணியை ருசித்துக் கொண்டிருந்த பலரும் விக்கித்துப் போயினர். ஆனால், விருந்து கொடுத்த ஆலை உரிமையாளர் பாஸ்கரோ சிறிதும் அசரவில்லை. அவரிடம் அதிகாரிகள் விசாரித்ததற்கு, தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இப்படி பிரியாணி விருந்து கொடுப்பது வழக்கம் என்று கூலாக கூறி விட்டார். அங்கு விருந்து சாப்பிட்டவர்களும் ஆமாம், ஆமாம் என பாஸ்கர் கூறியதை ஆமோதித்துள்ளனர்.
ஆனாலும் சந்தேகம் தீராத தேர்தல் பறக்கும் படையினர், பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதா? என மில் முழுவதும் சோதனை நடத்தியது மட்டுமின்றி, அங்கு திரண்டிருந்தவர்களிடமும் தீவிர விசாரனை நடத்தினர். ஆனால் எந்த ஆதாரமும் சிக்காத நிலையில், ஆசை, ஆசையாக ஏராளமானோர் பிரியாணி சாப்பிடுவதை தடுக்க மனம் வராமல் விருந்து நடப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். உடன் வந்த போலீசாரும், பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தினரை ஒழுங்கபடுத்தும் பணியில் இறங்கிய கூத்தும் அரங்கேறியது.
தேர்தல் நெருங்க.. நெருங்க.. இது போல் இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறுமோ என போகப் போகத்தான் தெரியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




