ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் கைது
திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை.
சிறாரை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களை பார்ப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சென்னை நகரம் முதலிடத்தில் இருப்பதாக எஃப்பிஐ தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றுபவர்கள் மற்றும் பகிர்பவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எஃப்பிஐ வழங்கியது. அதில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில காவல்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
பட்டியலை வைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ள காவல்துறையினர் முதல்நபராக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை கைது செய்துள்ளனர். ஐடிஐ படித்துவிட்டு மெக்கானிக்காக பணியாற்றிய கிறிஸ்டோபர் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
செல்போன் எண்ணை வைத்து கிரிஸ்டோபரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சிறார் ஆபாசப் படத்தைப் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் காவல்துறை அறிவித்தது. இதனால்தான் பதிவேற்றம் செய்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிறிஸ்டோபர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் யாருக்கு ஆபாச படங்களை அனுப்பினாரோ அவர்களின் இன்பாக்ஸில் ஆய்வு செய்து அதன் மூலம் கிறிஸ்டோபர் தவறு செய்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆபாச படங்களை பரப்ப கிறிஸ்டோபர் பயன்படுத்திய இரண்டு முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்பதற்காக கிறிஸ்டோபரின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் கிறிஸ்டோபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




