இரு கட்டமாக எங்கெங்கு தேர்தல்..? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. இதிலும் குழப்பம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரு கட்டமாக தேர்தலை அறிவித்குள்ள நிலையில், எந்தத் தேதியில் எங்கு தேர்தல் என்பதிலும் குழப்பமான அறிவிப்பை வெளியிட்டு மேலும் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாநில தேர்தல் ஆணையம் என்றாலே குளறுபடி, குழப்பங்களுக்கு பஞ்சமில்லை என்பது போலாகிவிட்டது அதன் சமீப கால செயல்பாடுகள். 3 ஆண்டுகளாக தேர்தலை நடத்த தயக்கம் காட்டி, ஏதோதோ காரணங்களைக் காட்டி தள்ளிப் போட்டு வந்தது தேர்தல் ஆணையம் .இப்போதோ அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குளறுபடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.இந்த குளறுபடிகளை காரணம் காட்டியே பலரும் நீதிமன்றங்களுக்கு செல்வதால் தேர்தல் நடக்குமா ?என்ற சந்தேகம் இன்னமும் நீடிக்கிறது.
இந்நிலையில் 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டத் தேர்தல் என்ற அறிவித்த நிலையில், எந்தெந்த தேதியில் எந்தெந்த ஊர்களில் தேர்தல் என்பதற்கு இன்று காலை வரை பட்டியலை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் கண்ணாமூச்சி காட்டி வந்தது. இதனால் பலரும் விடை தெரியாமல் குழம்பி வந்த நிலையில், இன்று காலை தான் அந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தப் பட்டியலிலும் குளறுபடி தான். மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலுமே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களை பாதிப் பாதியாக பிரித்து 27-ல் பாதி இடங்களுக்கும், 30-ல் பாதி இடங்களுக்கும் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில்,156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 27-ந் தேதியும்,158 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 30-ந் தேதியும் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தாமல், இரு கட்டங்களாக தேர்தல் நடத்துவது ஏன்? மாநிலம் முழுவதும் எம்.பி, எம்எல்ஏ தேர்தலையே ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் போது, ஒரு மாவட்டத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் என்ன கஷ்டம்?. இதனால் மேலும் குழப்பம் தான் ஏற்படும் என்றே பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.





