4 பேர் என்கவுன்ட்டர் – வரவேற்பும்… விமர்சனமும்..
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் என்கவுண்டர் ஆக இல்லாமல் குற்றவாளிகளுக்கு நீதி பரிபாலன முறையில் மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
அவரவர் விருப்பப்படி மற்றவர்களை கொல்ல முடியாது குற்றவாளிகளை நீதிமன்றம்தான் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி எம்பி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசிதரூர் நீதிமன்ற தீர்ப்புக்கு வெளியே இது போன்ற தண்டனைகளை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் குற்றவாளிகள் 4 பேர் கொல்லப்பட்டது மிக தாமதமான முடிவு என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் வரவேற்றுள்ளார். தெலுங்கானா என்கவுண்டர் பலருக்கும் மகிழ்ச்சி தரும் வேலையில் என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா என்று கேள்வி எழுகிறது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஹைதராபாத் காவல்துறையினர் போல உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையினர் செயல்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தெலுங்கானா என்கவுண்டர் போன்று கடுமையான தண்டனை தருவதே சரி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில் தெலுங்கானா விவகாரத்தில் நீதித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சிறந்த செயலை செய்த தெலுங்கானா காவல்துறையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி வரவேற்பு தெரிவித்துள்ளார். வக்கிர மனம் கொண்ட மனிதர்களுக்கு
தெலுங்கானா என்கவுண்டர் பாடமாக அமையட்டும் என்று நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.





