10 வயது கோவை சிறுமியை பாலியல் கொலை செய்த வழக்கு : கொலையாளி மனோகரனின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு!!
கோவையில் 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த வழக்கில், கொலையாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 2010-ம் ஆண்டில் பள்ளி சென்ற 10 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோரை வேன் டிரைவர் மோகன்ராஜ், அவனுடைய கூட்டாளி மனோகரன் ஆகியோர் கடத்திச் சென்றனர்.10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அச்சிறுமியையும், சிறுவனையும் கொடூரமாக கொலை செய்து ஆற்றில் வீசினர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்ராஜ், மனோகரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது, போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் கடந்த 2012 -ம் ஆண்டில் மனோகரனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது கோவை நீதிமன்றம் .

தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல் முறையீடு செய்தார்.கடந்த 2014-ல் இந்த மேல்முறையீடு தள்ளுபடியானது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனோகரன் அப்பீல் செய்தும், நிராகரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இதனால் மனோகரனுக்கு வரும் டிசம்பர் 2-ந்தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என கோவை நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருணை காட்டுமாறு ஆளுநருக்கு மனு கொடுக்க அவகாசம் அளிக்காமல் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதைத் தொடர்ந்து வரும் 2-ந் தேதி மனோகரனுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம் . மேலும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





