162 எம்எல்ஏக்கள் எங்க பக்கம்… அணிவகுப்ப பாக்க வாங்க…! மகாராஷ்டிர ஆளுநருக்கு சிவசேனா பகிரங்க அழைப்பு!!
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நீரூபிக்க, தங்கள் ஆதாவு 162 எம்எல்ஏக்களை அணிவகுக்கச் செய்து, மாநில ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளன சிவசேவும் அதன் கூட்டணி கட்சிகளான என்.சி.பி.யும் காங்கிரசும் .இதனால் மகாராஷ்டிரா அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வந்த குழப்பம், 2 நாட்களுக்கு முன் பாஜக திடீரென ஆட்சியமைத்தது முதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சியமைத்தோம் என பாஜக தரப்பு கூற, அஜித் பவாரைத் தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் என தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது.இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திலும் 2 நாட்களாக அனல் பறக்கும் வாதமாகி நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு 162 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக சிவசேனா – என்.சி.பி-காங்கிரஸ் தரப்பில், ஆளுநரிடம் இன்று பட்டியலையும் அக்கட்சித் தலைவர்கள் இன்று காலை வழங்கினர். மெஜாரிட்டி ஆதரவு தங்களுக்கு இருப்பதால், பட்னா விஸ் அரசு பதவி விலக வேண்டும். சிவசேனா கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இன்று மாலை டுவிட்டரில் வெளியிட்ட செய்தி மகாராஷ்டிர அரசியலில் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. எங்கள் பக்கம் 162 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதை நிரூபிக்க மும்பை ஹயாத் ஹோட்டலில் 162 எம்எல்ஏக்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது. சந்தேகம் இருந்தால் ஆளுநர் நேரில் வந்து பார்க்கலாம் என்று சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

அதன்படி மாலை 6 மணி முதலே வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டனர். சரத் பவார், அவருடைய மகள் சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரே அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் தாப்பில் சவான், கார்கே உள்ளிட்ட மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் ஹோட்டலுக்கு வருகை தந்தனர்.
சஞ்சய் ராவத் கூறிய படியே, 7 மணிக்கு ஹயாத் ஹோட்டலின் பிரம்மாண்ட ஹாலில் எம்எல்ஏக்கள் குழும ஆரம்பித்தனர். மகிழ்ச்சி பொங்க எம்எல்ஏக்கள் சிரித்துப் பேசியபடி அங்கு உலா வந்தனர். நாங்கள் 162 பேர் என்ற பதாகைகளை எம்எல்ஏக்கள் பலர் கையில் ஏந்தியிருந்தனர்.இதைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த செய்தியாளர்கள் முன்பு அணிவகுப்பு நடத்தி தங்கள் பலத்தை காட்டினர். இதைத் தொடர்ந்து பேசிய சிவசேனா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , எங்கள் பக்கமே மெஜாரிட்டி உள்ளது. எனவேஆட்சி அமைக்கப் போவதும் உறுதி என்று தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் பாஜக அரசு பதவியேற்ற விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் எங்கள் பக்கம் 162 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்க சிவசேனா கூட்டணி கட்சிகள், தங்கள் எம்எல்ஏக்களை வைத்து பகிரங்கமாக அணிவகுப்பு நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் :
பாஜக: 105
சிவசேனா : 56
என்.சி.பி : 54
காங்கிரஸ் : 44
இதர கட்சிகள் : 16
சுயேட்சைகள் : 13
இதில் தேசிய வாத கட்சியில் அஜித் பவார் தவிர்த்து, யாரும் பாஜக பக்கம் செல்லவில்லை அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பதவியேற்பின் போது அவருடன் சென்ற 11 எம்எல்ஏக்களும், திரும்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் சிவசேனா 56, என்சிபி 53, காங்கிரஸ் 44 என இந்தக் கூட்டணியின் பலம் 153 ஆகவும், உதிரிக் கட்சிகள், சுயேட்சைகள் தரப்பில் 9 பேர் என 162 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக சிவசேனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.





