மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கு நிம்மதி..? உடனடி வாக்கெடுப்பில்லை..! விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!
மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் பட்னா விஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், பரபரப்பான வாதம் நடைபெற்ற நிலையில் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம் .உடனடி வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்படாததால் பட்னாவிஸ் அரசுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.மகாராஷ்டிரா விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்..?பரபரப்பான வாதம் தொடங்கியது!!
மகாராஷ்டிராவில், அவசர, அவசரமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இந்தக் கட்சிகள் முறையிட்டதைத் தொடர்ந்து, விடுமுறை தினமான இன்று காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணை தொடங்கியது.
சிவசேனா கூட்டணி தாப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும், மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

சிவசேனா தரப்பில் ஆஜராகிய கபில் சிபல், சிங்வி ஆகியோர், மகாராஷ்டிரா ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், சட்டம் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நீரூபிக்க உத்தர விட வேண்டும் என வாதிட்டனர். பெரும்பான்மை பலம் இருப்பதாகக் கூறித் தானே முதல்வராக பட்னாவிஸ் முதல்வர் பதவியேற்றுள்ளார். எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டியதுதானே? என்று வாதிட்ட கபில் சிபல், ஒரு நாள் தாமதித்தாலும் குதிரை பேரத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் வாதிட்டார்.
இதனை ஆட்சேபித்த, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடனடி வாக்கெடுப்புக்கு உத்தரவிட எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்சியமைக்க மாநில ஆளுநர் விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அது தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க 3 நாட்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இறைத் தொடர்ந்து, ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு மட்டுமின்றி, சிவசேனா தரப்புக்கும் நாளை காலை 10.30 வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நாளை காலை10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால்,மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்துக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்றே தீர்வு கிடைக்கும் என எதிர் பார்த்த சிவசேனா தரப்புக்கு இன்றைய உத்தரவு ஏமாற்றத்தை அளித்துள்ள அதேவேளையில், பாஜக தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.





