பெரியவரை கன்னத்தில் அறைய முயன்ற அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை அருகே அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு முகாமில் பங்கேற்ற 124 பேருக்கு சுமார் 15 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார் மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
அப்போது ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது முன் வரிசையில் இருந்தவர்களை முந்திக்கொண்டு மேடையேற முயன்ற பெரியவர் ஒருவரை அமைச்சர் செல்லூர் ராஜு கன்னத்தில் அறைய முயன்றார்.
இது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் பரட்டை தலையுடன் மனு கொடுக்க வந்துள்ள உங்களின் ஏழ்மை நிலையை பார்க்கும்போது பாவமாக இருப்பதாக குறிப்பிட்டார்.






