மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்..! அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு!!
மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், அடுத்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்பாணையை டிசம்பர் 2-ந் தேதி வெளியிட உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யப்படுவர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பதவிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் மூலம் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்காக நேற்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட, மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.இது குறித்து வெளியாகும் தகவலில் உண்மையுமில்லை என்று இன்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது.





