“கண்டக்டராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ஆவோம் என நினைத்திருப்பாரா?” ரஜினி “ரீல்..! எடப்பாடி “ரியல்”..! ‘நமது அம்மா’ நாளிதழில் சாட்டையடி!!
முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினி பேசியதற்கு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் சாட்டையடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினியை ரீல் தலைவர் என்றும், உழைப்பால் உயர்ந்த எடப்பாடியோ ரியல் தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ள நமது அம்மா நாளிதழ், கண்டக்டராக இருந்த ரஜினிதான் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று ஏகத்துக்கும் விமர்சித்துள்ளது.
அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறி வரும் ரஜினிக்கும், அதிமுகவுக்கும் இடையே சமீப காலமாக முட்டல் மோதலாகி வருகிறது. தமிழக அரசியலில் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என சமீபத்தில் ரஜினி கூற, இந்த விவகாரத்தில் ஆளாளுக்கு பதிலளிக்கத் தொடங்கினர். வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் எப்போதோ நிறைவேற்றி விட்டார் என திமுக தரப்பில் பதில் கொடுக்கப்பட்டது. ரஜினி என்ன தலைவரா? அவர் வெறும் நடிகர் தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், கமல் 60 விழாவில் பங்கேற்றுப் பேசிய ரஜினி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி வம்படியாக சினிமா டயலாக் போல பேசியது அதிமுகவினரை உசுப்பேற்றியுள்ளது. தாம் முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதுபோல் அவருடைய ஆட்சியும் 5, 6 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றே பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால் அதிசயமாக இன்றும் ஆட்சி நீடிக்கிறது. இப்படி அரசியலில் அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என்று ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.எடப்பாடி குறித்த ரஜினியின் இந்தப் பேச்சு அதிமுகவினரை ஏகத்துக்கும் சூடேற்றி விட்டது என்றே கூறலாம்.

அதிமுக அமைச்சர்கள் பலரும் ரஜினிக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ரஜினியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவிலும் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, தாம் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
சினிமாவில் முதல் காட்சியில் முதல்வராக ஆசைப்பட்டு 3-வது காட்சியிலேயே முதல்வராகி விடும் ரஜினி போன்ற ரீல் தலைவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். ஆனால் அரசியலில் முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர். அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர். தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ரியல் தலைவர் என்றெல்லாம் நமது அம்மா நாளிதழ் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




