2ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு..!
சென்னையில் 2ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தவெக அரசின் இரண்டாவது முதலீட்டாளர்கள் மற்றும் செயலாக்க மாநாட்டில் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கோவளத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியை தேடி அரசு செல்லவில்லை என்றார். தொடர்ந்து, இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 58 ஆயிரத்து 214 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 65 ஆயிரத்து 786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JM Baxi Ports & Logistics, CSE Development India, Avigna, VS Motor Company உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.
இதற்கிடையே, 2ஆவது வெற்றி முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தமிழ்நாட்டில் 10 நிறுவனங்கள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதிகபட்சமாக, சி.எஸ்.இ. டெவலப்மெண்ட் இந்தியா நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பல்வேறு மாவட்டங்களில் 8,140 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. சரக்குப் போக்குவரத்து துறையில், ஜே.எம் பாக்ஸி போர்ட்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 5,200 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
தொழில் பூங்கா அமைக்க அவிக்னா பிரைவேட் நிறுவனம் 5,000 கோடி ரூபாயும், கிரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் நிறுவனம் 2,650 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளன. மின்மோட்டார்கள் மற்றும் தானியங்கிக் கருவிகள் உற்பத்திக்கு டபிள்யூ.இ.ஜி (WEG) நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்காக சன்மார் குரூப் 1,950 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. டைட்டன் கம்பெனி 1,500 கோடி ரூபாய், இமாமி அக்ரோடெக் (Emami Agrotech ) 1,380 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கும் விதமாக மாநிலத்தின் 25 மாவட்டங்களில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாகச் சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் தேனி உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில், 17 ஆயிரத்து 413 கோடி ரூபாய் முதலீட்டில் 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 16 ஆயிரத்து 411 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
மோட்டார் வாகன உதிரிபாகங்கள், வேதிப்பொருட்கள், மூலதன உபகரணங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டக்டர், மின்னணுவியல் மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் புதிய ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 12 நிறுவனங்களும் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாட்டை உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கான முக்கிய மையமாக மாற்றும் நோக்கில் இந்த முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




