--- --:--:-- --

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான விசாரணை தொடங்கியது!

4

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் நீதிமன்றம் நியமித்த விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் கள்ளக்குறிச்சியில் விசாரணையைத் தொடங்கினார்.தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் நீதிமன்றம் நியமித்த விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் கள்ளக்குறிச்சியில் விசாரணையைத் தொடங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக, அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது.

 

 

உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்த நிலையில், மாவட்ட எஸ்பியிடம் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐ.ஜி. காமினி கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இதையடுத்து, கள்ளக்குறிச்சிக்கு சிருஷ்டி சிங் நேரில் வந்து விசாரணையை நேற்று தொடங்கினார். முதற்கட்டமாக, சிருஷ்டி சிங்கிடம், வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானாஸ் ஒப்படைத்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சிருஷ்டி, வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் அருள் விக்னேஷின் இல்லத்துக்கு நேரில் சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் திமுக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் உள்விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் சுமதி மற்றும் சமூக ஆர்வலர் சுனிதா ஜோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புகார் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய இக்குழுவுக்குத் தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுவதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனிடையே, தலைமைச் செயலாளருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், இப்புகார் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon