--- --:--:-- --

தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்பு!

1

தவெக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று இருப்பது கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

 

 

இதனைத் தொடர்ந்து, தவெக அமைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகியவை இணைந்தன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளித்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் இடதுசாரி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

 

 

இந்நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திவருகிறார். முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமினி இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் விசிக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

கடந்த இரண்டு முறையும் தவெக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்த நிலையில், தற்போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசார் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், அம்முக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவளித்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜர் முதலமைச்சர் நடத்தும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். இந்த ஆலோசனையில், தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon