--- --:--:-- --

திருச்சி அருகே மரத்தில் வேன் மோதி கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு..!

4

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோர மரத்தில் வேன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரம் பகுதியில் செங்கல் சூளையில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள், ஒரு வேனில் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவிற்குச் சென்றனர்.

 

 

விழா முடிந்து திரும்பும் நிலையில், முசிறி அடுத்த ஜெம்புநாதபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் வேன் மோதியது.இதில் மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

 

 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

 

 

அதேபோல, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் விஜய், படுகாயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆறுதல் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon