பி.எஃப் விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களின் நலன் கருதி பி.எஃப் பணம் எடுக்கும் விதிகளில் மிக முக்கியமான தளர்வுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது சேமிப்புத் தொகையை மொத்தமாக எடுப்பதற்குப் பதிலாக, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் ‘சிஸ்டமெடிக் வித்ராயல் திட்டத்திற்கு’ (SWP) இ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு வியாழக்கிழமை (நவம்பர் 19) ஒப்புதல் அளித்துள்ளது.
1. குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைப்பு:
பி.எஃப் கணக்கில் உறுப்பினர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசரத் தேவைகளுக்கு ஊழியர்கள் தங்களது கணக்கிலிருந்து 90 சதவீதம் வரையிலான தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
2. வேலையிழந்தால் 2 மாதங்களில் முழுப் பணம்:
வேலையிழந்த பிறகு பி.எஃப் கணக்கிலுள்ள முழுத் தொகையையும் எடுப்பதற்கான காத்திருப்பு காலம், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் 12 மாதங்களாக உயர்த்தப்பட்டிருந்தது. இது ஊழியர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இனி பழையபடி 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தாலே முழு பி.எஃப் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். (அதேநேரம், இறுதி ஓய்வூதியத் தொகையை (EPS) எடுப்பதற்கான காத்திருப்பு காலம் 36 மாதங்களாகவே தொடரும்).
ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் தேவையான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு, சுமார் இரண்டு மாதங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போது 58 வயதில் ஓய்வுபெறும்போது 100% பி.எஃப் தொகையையும் மொத்தமாக எடுத்துக்கொள்ளவும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெறவும் விதிகள் உள்ளன. புதிய திட்டத்தின் கீழ் ஓய்வுபெறுவோருக்கு 3 விதமான வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
1. சேமிப்புத் தொகை முழுவதையும் பி.எஃப் கணக்கிலேயே வைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதாந்திரம்/காலாண்டு) தவணையாகப் பெற்றுக்கொள்ளலாம்.
2. ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் பெறலாம்.
3. அசல் தொகையை அப்படியே கணக்கில் வைத்துவிட்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் கணக்கில் மீதமிருக்கும் தொகைக்கு வழக்கமான இ.பி.எஃப் வட்டி தொடர்ந்து கிடைக்கும். ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்தத் திட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு, மீதமுள்ள முழுப் பணத்தையும் எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஒருவேளை தவணை பெறும் காலத்தில் உறுப்பினர் உயிரிழந்தால், அவரது வாழ்க்கைத் துணை அல்லது நாமினி அதே விதிகளின் கீழ் தொடர்ந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 55 வயதுக்கு மேற்பட்ட, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பி.எஃப் சேமிப்பு வைத்துள்ள சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தால் உடனடியாகப் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, நிறுவனங்களின் சம்பளப் பட்டியலைச் சாராமல் உறுப்பினர்கள் தாங்களாகவே டிஜிட்டல் செயலிகள் வழியாகத் தங்கள் பி.எஃப் கணக்கில் கூடுதல் பணத்தைச் செலுத்தும் வசதி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், டெலிவரி ஊழியர்கள் (Gig workers), வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் UAN கணக்குகளில், பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ் மற்றும் சிறு தொகைகளை வரவு வைத்து அவர்களுக்கும் ஓய்வூதியப் பாதுகாப்பை உருவாக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





