--- --:--:-- --

சு. வெங்கடேசன் விமர்சனத்துக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதிலடி

7

சென்னை பாரதிய வித்யா பவனில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எழுத்தாளர் பி. சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ நூலின் 16-வது பாகம் (தமிழ்), 4-வது பாகம் (ஆங்கிலம்) வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசின் நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துப் பேசினார்.

 

 

கடந்த 2024-ம் ஆண்டு நீதிபதி மகாதேவனுடன் இணைந்து வழங்கிய தீர்ப்பில், நூலகப் புத்தகக் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, கல்கியின் புகழ்பெற்ற ‘சிவகாமியின் சபதம்’ நாவலின் மேலட்டையை மட்டும் மாற்றி, ‘வீரம் விளைந்த வரலாறு’ என்ற பெயரில் போலிப் புத்தகம் அச்சிடப்பட்டு, இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்து அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக வெளிப்படையான புத்தகக் கொள்முதல் நடைமுறைகள் தொடர்பாகத் தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

 

ஆனால், 2025-ம் ஆண்டிலும் மீண்டும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறிய அவர், பெரியார் அறிவுலக நூலகங்களில் அகல்விளக்கு பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பதாக விமர்சித்தார். மேலும், அங்கு மகா பெரியவா நூல்களின் அனைத்துத் தொகுதிகளையும் இடம்பெறச் செய்தால் தான் முறைகேடுகளால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும் என்று தான் மனப்பூர்வமாக நம்புவதாகக் குறிப்பிட்டார்.

 

 

 

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நூலகக் கொள்முதலில் நடைபெற்றிருப்பது ஊழல் என்றும், அதற்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், பாவம், புண்ணியம் குறித்துப் பேசுவது நீதிபதிகளின் வேலையல்ல என்றும் விமர்சித்தார்.

 

 

இந்நிலையில், சு. வெங்கடேசனின் விமர்சனத்துக்குப் பதிலளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “நான் எப்படி பேச வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், கார்ப்பரேட் நிறுவன நிர்வாகி போல பென்ஸ் காரில் வந்து இறங்கிய வெங்கடேசனுக்கு, புத்தக ராயல்டி வருமானத்தால் மட்டுமே இந்த வசதி கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேசலாமா என்றும் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கும் சு. வெங்கடேசனுக்கும் இடையிலான கருத்து மோதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon