கரடிமலையில் கிடைத்த தொன்மையான ஓவியங்கள்!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒட்டம்பட்டு தண்டரை கிராமத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான செங்காவி வண்ணப் பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள், அப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒட்டம்பட்டு தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள கரடிமலையில், வேட்டவலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பாரதிராஜா மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரடிமலையின் அடிவாரத்தில் உள்ள பாறைப் புடவின் கீழ்ப்பகுதியில் செங்காவி வண்ணத்தில் வரையப்பட்ட பழமையான ஓவியங்களைக் கண்டறிந்தனர். இந்த ஓவியங்கள், விளைநிலங்களைச் சுற்றி உயிர்வேலியாகப் பயன்படுத்தப்படும் கோபுரக்கள்ளிச் செடியை ஒத்த வடிவத்தில் காணப்படுகின்றன.
இதேபோன்ற வடிவமைப்பைக் கொண்ட பாறை ஓவியங்கள் ஆலம்பாடி, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. கரடிமலையில் கண்டறியப்பட்ட ஓவியத்தில், கள்ளிச்செடியின் இருபுறங்களிலும் மான்களை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இடதுபுறம் உள்ள மானின் பின்பகுதி கள்ளிச்செடிகளுக்குள் மறைந்திருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. வலதுபுறம் உள்ள விலங்கின் கழுத்து நீண்டு காணப்படுவதுடன், அதன் தலைப்பகுதி தெளிவற்ற நிலையில் உள்ளது. மேலும், இந்த உருவத்தின் மீது காட்டுப்பன்றியின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்கள் அனைத்தும் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன.
இந்தப் பாறை ஓவியங்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாறைப் புடவின் கீழ்ப்பகுதியில் மழைநீர் எளிதில் புகும் வகையில் அமைந்துள்ளதாலும், காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கைச் சிதைவுகளாலும் ஓவியங்களில் உள்ள பல உருவங்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றன.
மேலும், கரடிசுனை என்ற இடத்தில் புதிய கற்கால மனிதர்கள் தங்களது கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டவும், கூர்மைப்படுத்தவும் பயன்படுத்தியதற்கான அடையாளங்களாக மூன்று கற்குழிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இப்பகுதியில் வாழ்ந்த வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்த தொன்மையான மனிதர்களின் வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





