பிரபல கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்.. இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்!.!
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் திரையிசையில் முன்னணி கிட்டார் கலைஞராகத் திகழ்ந்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’ திரைப்படம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாகப் பல பாடல்களுக்கு கிட்டார் இசை வாசித்துள்ளார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சதானந்தம் இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இசைப் பங்களிப்பு பல புகழ்பெற்ற பாடல்களின் சிறப்பான இசை அமைப்பில் முக்கிய இடம் பெற்றது. ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பாடல்களில் இவரது கிட்டார் இசை ரசிகர்களைக் கவர்ந்தது.திரைப்படப் பாடல்களுடன், பின்னணி இசையிலும் சதா மாஸ்டர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி, பல்வேறு இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். இசைக் கச்சேரிகளிலும் முத்திரை திரைப்படங்களுக்கு இசை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து கிட்டார் வாசித்து வந்தார் சதா மாஸ்டர். தனது நீண்டகால இசைப் பயணத்தின் மூலம் தமிழ் திரையிசைக்கு அவர் அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல வீடியோவில், “ஆரம்ப காலத்தில் இருந்து நீண்ட நெடுங்காலமாக என்னுடன் பணிபுரிந்த சதானந்தம் இசையமைப்பாளர் சுதர்சனத்தின் மகன் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகவும் துக்கமடைந்தேன். காலமானவர்களின் அவர்களை அந்த நிலையில் நான் பார்ப்பது கிடையாது. பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் என் உயிருடன் வாழ்ந்தவர்கள். உணர்வுடன் கலந்தவர்கள். சதானந்தம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





