கும்பகோணத்தில் 5 புதிய பேருந்து சேவைகள்!
கும்பகோணத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 5 புதிய பேருந்து சேவைகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், இன்று (28.10.2026) புதன்கிழமை, கும்பகோணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 5 புதிய பேருந்து சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தோம்.
புதிய பேருந்துகளின் வழித்தடங்கள்:
A9 – கும்பகோணம் – ஆரலூர் (வழி: செறுகடம்பூர்)
A65 – கும்பகோணம் – திருப்புறம்பியம் (வழி: கொத்தங்குடி)
வட்டப் பேருந்து – கும்பகோணம் – சுவாமிமலை – கும்பகோணம்
A64 – கும்பகோணம் – பந்தநல்லூர் (வழி: ஆடுதுறை)
A58 – கும்பகோணம் – வடமட்டம் (வழி: மல்லபுரம், திருமலைராஜபுரம்)
தொடர்ந்து, மாணவிகளின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட புதிய பேருந்தில் பயணித்து, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மேலும், மாணவிகளுடன் இணைந்து கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை பேருந்தில் பயணம் செய்து, பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் முறையாக நிறுத்தப்படுகின்றனவா என்றும், மாணவிகளுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா என்றும் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம். இவ்வாறு அமைச்சர் வினோத் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





