--- --:--:-- --

இன்ஸ்டா விளம்பரத்தால் புதுச்சேரியில் 2 ரெஸ்டோ பார்களுக்கு சீல்

download - 2026-10-13T171550.549

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி ரெஸ்டோ பார்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாக, வார இறுதியில் மட்டும் புதுச்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்த மதுப் பிரியர்கள், தற்போது வார நாட்களிலும் குவிந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மதுப்பிரியர்களை ஈர்ப்பதற்காக தங்கள் கடைகளுக்கு ஆண்களுடன் வரும் பெண்களுக்கு மது இலவசம் போன்ற சலுகைகளையும் சில ரெஸ்டோ பார்கள் அறிவித்து வருகின்றன.

 

 

புதுச்சேரி கலால் துறை விதிகளின்படி, மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகள் தங்களது வளாகங்களில் வாடிக்கையாளர்களை மது அருந்தத் தூண்டும் வகையிலோ அல்லது மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலோ விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களைக் கவரும் விதமாக பரிசுப் பொருட்கள் மூலமாக விளம்பரம் செய்யவும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

 

இருப்பினும், இந்த விதிகளை மீறி மதுபான சலுகைகளைக் குறிப்பிட்டு கடைகளின் வாசல்களிலும் பொது இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும் கலால்துறையும் அவற்றை அகற்றி வருவதால், தற்போது ரெஸ்டோ பார் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதோடு, ரெஸ்டோ பார்களில் இசைக்கப்படும் இசைகளுக்கு பெண்கள் நடனமாடும் வீடியோக்களும் வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

 

 

அப்படி புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் செயல்படும் ஒரு ரெஸ்டோ பாரின் உரிமையாளர், மதுப்பிரியர்களை ஈர்க்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “எல் நினோ வெயிலுக்கு இளநீர் குடிக்கலாம்; ஆனால் இரண்டுக்கு மேல் குடிக்க முடியாது. மோர் குடிக்கலாம்; ஆனால் அதிகம் குடித்தால் வயிறு கெட்டுவிடும். அதனால் உங்களுக்கு அன்லிமிடெட் பீர் வேண்டுமா, எங்களிடம் வாருங்கள். ரூ.1,200 கொடுத்தால் எத்தனை பீர் வேண்டுமானாலும் குடியுங்கள்; ஆனால் இடையில் சிறுநீர் கழித்தால் அந்த சலுகை இல்லை” என்று பேசியிருந்தார்.

 

 

இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் மற்றும் மதுப்பிரியர்கள், இந்த விளம்பரம் குறித்து கலால்துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகாரளித்தனர். அதையடுத்து, சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் குலோத்துங்கன் கலால்துறைக்கு உத்தரவிட்டார்.

 

 

அதன் அடிப்படையில், வெயிலுக்கு மோர் குடிப்பதைவிட பீர் குடிக்கலாம் என்று இன்ஸ்டாவில் சலுகை அறிவித்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், கலால் சட்டம் மற்றும் 1970-ஆம் ஆண்டு விதிகளையும் மீறியதற்காகவும் கருவடி குப்பம் பகுதியில் இயங்கும் ‘ராஜராஜன் வைன்ஸ்’ மற்றும் திருவள்ளுவர் சாலையில் இயங்கும் ‘ராணா ஃபுட் ஸ்டாப்’ (Rana Food Stop – Atoms Kitchen) ஆகிய ரெஸ்டோ பார்களுக்கு இன்று புதுச்சேரி கலால் துறை தாசில்தார் ராகேஷ் கண்ணா தலைமையில் போலீசார் முன்னிலையில் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon