--- --:--:-- --
images - 2026-10-13T165936.308

கடந்த தி.மு.க ஆட்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், மாநிலத்தில் உள்ள சில தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து “கட்சி நிதி” என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக ரூ.100 கோடிக்கு அதிகமான மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை மாநகரக் காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

 

தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை மட்டும் ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவேட்டில் எடுத்துக்கொண்ட நீதிபதி, மனுதாரரின் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சனின் கோரிக்கையை ஏற்று, எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

மாநில அரசு தலைமை அரசு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்தியன் மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புலனாய்வு அதிகாரி கூறியிருப்பதாவது, பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரான பி.டி. அரசகுமார் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமார் ஆகியோர் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகக் கூறி ஆரம்பத்தில் அவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர் எஃப்.ஐ.ஆர்-இல் சேர்க்கப்படவில்லை.

 

 

விசாரணையில் அன்பில் மகேஷிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்த பிறகே, காவல்துறை அவரை 5-வது குற்றவாளியாகச் சேர்த்து, ஊழல் தடுப்புச் சட்டம் 1888-ன் கீழ் குற்றச்சாட்டுகளை இணைத்து எஃப்.ஐ.ஆர்-ஐ திருத்தியது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-ன் கீழ் தேவைப்படும் முன்அனுமதி, மனுதாரர் கூறுவது போல் 2026 ஜூன் 23 அன்று பெறப்படவில்லை. மாறாக மாநில அரசிடமிருந்து 2026 செப்டம்பர் 7 அன்றே பெறப்பட்டது என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

 

 

 

மாநில அரசிடமிருந்து அல்லாமல் ஆளுநாிடமிருந்து மட்டுமே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை மறுத்த புலனாய்வு அதிகாரி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதற்கு முன் மாநில அரசிடமிருந்து சரியான முறையிலேயே அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

ஆதாரமற்ற மற்றும் தவறான காரணங்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். “இவ்வளவு பெரிய அளவிலான குற்றச் செயலின் விசாரணையில் தேவையில்லாத தடைகளை உருவாக்கவும், நடைமுறைகளைத் தாமதப்படுத்தவும் மட்டுமே மனுதாரர் தேவையற்ற சிக்கல்களை உருவாக்க முயல்கிறார். மனுதாரரின் நடத்தை, தொடர்புகள், அதிகாரப்பூர்வ பதவி மற்றும் அதைத் தொடர்ந்த நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தொடர்ச்சியான சூழல்களை விசாரணை வெளிப்படுத்தியுள்ளது” என மத்திய குற்றப்பிரிவு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon