தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், வரும் வியாழக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக எல்-நினோ பாதிப்பு ஆய்வுக்குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிக்கு நகர்ந்து வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சாதகமாக சூழலை ஏற்படுத்தும் என்றும் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





