இட்டுக்கட்டிய பொய்களை பரப்பி வருகிறார்கள் – நாஞ்சில் சம்பத்
தவெக ஆட்சி குறித்து வெளியான சர்ச்சைக்கு அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசியல் சூழலில் முக்கிய பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தபோது அவருடன் சென்றவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.கவில் மிகமுக்கியமான பேச்சாளராக நீண்ட காலமாக இருந்துவந்த அவர், மேடைகளில் கருணாநிதி, ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துபேசியுள்ளார்.
வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு ம.தி.மு.கவிலிருந்து விலகினார். அதன்பின்பு, ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்து கொண்டார். அ.தி.மு.கவில் அவருக்கு கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. நாஞ்சில் சம்பத்தின் பேச்சுகளால் கவர்ந்த ஜெயலலிதா, சம்பத்துக்கு இன்னோவா காரை பரிசளித்தார் அந்தச் சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
அதைத் தொடர்ந்து, நெட்டிசன்களால் கவனிக்கப்படும் நபராகவே நாஞ்சில் சம்பத் இருந்துவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்ட போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்தார். பின்னர், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கினார்.
இடையில் ஒரு படம் நடித்தவர், மீண்டும் திமுக பக்கம் சென்றார். ஆனால் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் சில காலம் திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார். இதற்கிடையே தான் கடந்த டிசம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விஜய்க்கு, ’நீயும் முதல்வராகலாம்…’ என்ற புத்தகத்தை வழங்கி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்ட நாஞ்சில் சம்பத்துக்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கினார். அதன்படி தவெக தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் தான் தனது எக்ஸ் பக்கத்தில், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது.” என்று நாஞ்சில் சம்பத் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. அவர் தவெக தலைமையை விமர்சிக்கிறார் என்று வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறினர்.
தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள பதிவில், “உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய். இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் அவரின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!” என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





