தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை.!
மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வருகிற 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கடந்த வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் இன்று 3 மணியளவில் முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, தாராபுரம் உடுமலை சாலையில் சித்ராவுத்தன்பாளையம் கிராமம் அருகேயுள்ள மாருதி நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தின் பின்புறத்தில் இருப்பவர்களும் முதல்வர் விஜய்யை எளிதாக பார்க்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி மார்க்கமாக காரணம்பேட்டை செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து பல்லடம் வழியாக தாராபுரம் செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்து, கார்கள் நீலாம்பூர் வழியாக வந்து L&T பைபாஸ் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நீலாம்பூர், சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்லவும் அவிநாசி சாலை வழியாக வெளியேறும் வாகனங்கள் லட்சுமி மில்ஸ் பகுதியில் U-Turn செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக செல்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று, அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையை யொட்டி விமான நிலைய பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்பாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை. மேலும், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பயணிக்கும் சாலை மற்றும் கோவை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜயின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




